Get Adobe Flash player

கல்வியூடாக முன்னேற்றத்தை நோக்கி

குடும்ப வறுமை காரணமாக பாடசாலைக்கு ஒழுங்காகச் சமுகமளிக்க முடியாத சிறுவர்களுடனான உரையாடல்களின் விளைவாக “கல்வியூடாக முன்னேற்றத்தை நோக்கி” என்ற திட்டம் உதயமானது.  பாடசாலைக்குக்கூடச் செல்லாது வீதியோரங்களில் சிறு வியாபாரம் செய்தும் கழிவுலோகங்களை விற்றும்  வறுமையில் வாடும் தங்களது குடும்பங்களுக்கு தம்மாலான வருமானத்தை இச்சிறுவர்கள் பெற்றுக்கொடுத்துவந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் உள்நாட்டு முரண்பாடடினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் தற்காலிக கொட்டகைகளிலும் தமது வாழ்க்கையினை ஓட்டுகின்றனர். கணவர்களை இழந்த தாய்மார்களும் அவர்களின் பிள்ளைகளுமே உள்நாட்டு முரண்பாட்டினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாவர்.
உள்நாட்டு முரண்பாட்டின்போது சிறார்களும் பதின்ம வயதினரும் பாடசாலைக்கு தொடச்சியாகச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு  பாடசாலைக்கல்வியை நிறைவுசெய்ய முடியாமலிருந்தனர்.
இவ்வாறான சிறுவர்களுடன் SEED சமூகப் பணியாளர்கள்  உரையாடிய சந்தர்ப்பத்தில் அச்சிறுவர்களுக்குள் இருக்கும் கல்விக்கான தாகமும் செயலார்வமும் தெரியவந்தது.
இச்சிறுவர்களுக்கு  பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன.  பாடசாலைச் சீருடையை வாங்கிக்கொடுப்பதற்கான  பண வசதியும் இவர்களின் பெற்றோரிடம் இல்லை. தமது பாடங்களை விளங்கிக்கொள்ளவும்,  மீட்டல் செய்யவும், தாம் கற்கத் தவறிய பாடங்களைக் கற்கவும் இம்மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் அவசியமாகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய கூறாக இருப்பது பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக பெற்றோருக்கு அளிக்கப்படும் விழிப்புணர்வு மற்றும் இந்தக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைக்கான சில அனுசரணைகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய சமூகப் பணியாகும்.
இத்திட்டமானது முற்றுமுழுதாக தனிப்பட்ட நபர்களின் நிதியுதவியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இத்திட்டத்திற்கு நிதியளிப்போர்  இரண்டு வகையினர். தமது வாழ்க்கையில் நடைபெறும் விசேட நிகழ்வுகளை முன்னிட்டு நிதியுதவியளிப்போர் ஒரு வகையினர். இம்மாணவர்கள்  பட்டப்படிப்பு அல்லது தொழிற்கல்வியை  நிறைவுசெய்யும்  காலம் வரைக்கும்  தொடர்ந்து நிதியுதவி அளிப்போர்  இரண்டாவது வகையினர்.  
தற்போது, இத்திட்டதினூடாக 50 மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் பயன்பெற்றுவருகின்றனர்.  இம்மாணவர்களின் குடும்பங்களுக்கு  உதவுவதே  இத்திட்டத்தின் சமூகப்பணியாளர்களின்  முக்கிய பணியாகும்.  இம்மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பாடசாலை ஆசிரியர்களுடன் சமூகப் பணியாளர் அடிக்கடி கலந்துரையாடல்களை மேற்கொள்வார். இந்த மாணவர்களுக்கான மேலதிக பிரத்தியேக  மாலைநேர வகுப்புக்களும்  ஒழுங்குசெய்யப்படுகின்றன. பெற்றோர்களுக்கான கூட்டங்கள் கிரமமாக நடாத்தப்படுவதுடன்  அந்தக் கூட்டங்களில்  உடல் ஆரோக்கியம், போஷாக்கு, குடும்பத்தில் வேலைகளைப் பகிh;ந்து செய்தல், பயன்தரு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது விழாக்களும்   கூட்டுச் செயற்பாடுகளும்  சமூக உணர்வை உருவாக்குவதோடு பாகுபாட்டையும், சமூகப் புறக்கணிப்பையும் புறந்தள்ளுகின்றன. 

Logo

seed logo 2.jpg

Photos