Get Adobe Flash player

மாதிரி சேதன விவசாயப் பண்ணை

SEED இன்  பிறப்பிடமாகவும்  கமம் மற்றும் விலங்கு வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட அயல்கிராம மக்களுக்கு சேதன விவசாயம் தொடர்பாகப் பயிற்சியளிக்கும் மாதிரிப் பண்ணையாகவும் இது விளங்குகின்றது.
SEED இன் முதல் அலுவலகம் அமைந்திருந்ததும் இங்குதான்.  SEED இன் முதல் திட்டத்திற்கான யோசனைகள் உதித்ததும் இங்குதான். ஆரம்பத்தில், அங்கு வசித்தவர்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்வதற்குப் பயன்பட்ட பண்ணை படிப்படியாக உள்ளூர்வாசிகளுக்கு சேதன விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதிரிப் பண்ணையாக உருவெடுத்தது.
பண்ணையின் வாசலில் அமைந்துள்ள பயிற்சி மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக் கழக விவசாய பீட மாணவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு பயிற்சிப் பட்டறைகள், பயிற்சிகள், கலந்துரையாடல்கள் நடாத்தப்படுகின்றன. இந்த மாதிரி சேதன விவசாயப் பண்ணை புதிய சேதன விவசாய அணுகுமுறைகளை பரீட்சித்துப் பார்க்கும் களமாகவும் செயற்படுகின்றது.
தென்னை மர நிழலில் ஊடுபயிராக பல பயிர்கள் பயிராக்கப்படுகின்றன. Azolla எனப்படும் கால்நடைத் தீவனப் பயிரானது   சிறு தடாகத்தில் வளர்க்கப்படுகின்றது.  கால்நடைகளின் புரத உணவூட்டத்தை அதிகரிப்பதற்காக Azolla ஏனைய கால்நடைஉணவுகளுடன் கலக்கப்பட்டு கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றது. grass_farm
கூட்டெரு மற்றும் உயிர்வாயு உற்பத்தியும் பண்ணையில் நடைபெற்றுவருகின்றது. அதுமட்டுமன்றி, பெரிய நீர்த்தாங்கியில் மழைநீர் சேகரிக்கப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குடிநீர் பாவனைக்குப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.   
பண்ணையில் வாத்து, முயல், ஆடு, செம்மறியாடு, பசு ஆகிய விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. ஓவ்வொரு விலங்கும் அவைகளுக்கேற்ற விதத்தில் பராமரிக்கப்படுகின்றன.  
விவசாயப் பயிர்களான பயிற்றை, மிளகாய், கத்தரி, மரவள்ளி,  கீரை வகைகள் ஆகியன பண்ணையில் பயிர்செய்யப்பட்டுவருகின்றன. அவற்றை  பூச்சி மற்றும் காலநிலைத் தாக்கங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான சோதனை முயற்சிகளும் நடைபெறுகின்றன. அதிக விளைச்சலைத் தரக்கூடிய  பயிர்கள் மட்டும் பயிர் செய்யப்படுவதுடன்,  விளைச்சலைக் கூட்டுவதற்கும் பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இங்கு இரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது பண்ணையின் சிறப்பம்சமாகும். பண்ணையின் இன்னொரு பகுதியில்  மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
பயன்தரு பழமரங்களான மா, பலா, வாழை, தேசி ஆகியனவும் பண்ணையில் வளர்கின்றன. பண்ணை உற்பத்திகள் வலுவூட்டல் வளாகப் போஷாக்குணவுத் தேவையின் சிறுபகுதியை நிறைவுசெய்யப் பயன்படுகின்றன.  
சூழலியல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளின் மீதுள்ள பேரார்வம், சூழலை  பாதிக்காத வாழ்க்கை முறையில் ஈடுபாடு ஆகியவற்றின் உந்துதல் காரணமாக,  ஆரம்பித்த காலத்திலிருந்து படிப்படியாக பண்ணை வளர்ச்சிகண்டு வந்துள்ளது.
சூழலைப் பாதிக்காத  பயிர்ச்செய்கை, முறையான விலங்கு வேளாண்மை ஆகியன போதிய வருமானத்தினை ஈட்டித்தரும் என்ற உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே விவசாயிகள் மத்தியில் அவை பற்றிய சிந்தனை, ஈடுபாட்டினைத்  தூண்டமுடியும். விவசாய இரசாயனப் பொருள் பாவனை மற்றும் முறையற்ற விலங்கு வேளாண்மை ஆகியவற்றின் பின்விளைவுகளை அறியாத  சில விவசாயிகள் அவற்றைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக இலாபம் அடைய விரும்புகிறார்கள்.  
சேதன விவசாயம், விலங்கு வேளாண்மை  தொடர்பாக அறிந்து கொள்வதற்கும்,  மீளச்சிந்திப்பதற்குமான ஒரு நடைமுறை வழியாக பண்ணை விளங்குகின்றது.  
SEED ஊழியர்கள் சூழலோடு இணைந்த பயிர்ச்செய்கை முறை மற்றும் விலங்கு வேளாண்மை ஆகிய துறைகளில் 10 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தினை மாதிரி பண்ணையு+டாகப் பெற்றுள்ளார்கள்.  இந்த அனுபவ அறிவு  விவசாயத்தையும் விலங்கு வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் மாற்று வழியைப் பின்பற்றுவதற்கான நம்பிக்கையை அவர்கள் மத்தியில் உருவாக்குகின்றது. 

Logo

seed logo 2.jpg

Photos